தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை மிகவும் முக்கியமானது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இந்தப் பருவமழை நீடிக்கும். தென்மேற்குப் பருவமழை முடிவடைந்த பிறகு, காற்றின் திசை மாறி வடகிழக்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றின் மூலம் மழை பெய்வதால் இது வடகிழக்குப் பருவமழை என அழைக்கப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயல்கள் இந்த மழைக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 48 சதவீதம் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்தான் கிடைக்கிறது.
2026 வடகிழக்குப் பருவமழை!
2026ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தமிழகத்திற்கு இந்தப் பருவத்தில் இயல்பான மழைப்பொழிவு கிடைக்கும் எனப் பருவகால முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 2026 மாதம் இயல்பு அளவைக் காட்டிலும் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது. ஆனால் நவம்பர் 2026 மாதத்தில் பருவமழை கிட்டத்தட்ட பொய்த்தே போனது. அவ்வப்போது ஏற்படும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக சில பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பாதை!
அதன்படி, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
இதன் காரணமாக, இன்று (நவம்பர் 25) இரவு 10 மணி வரை தமிழகத்தின், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தென்காசி, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




