இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு அஜித் தோவல் அழைப்பு!
மாலத்தீவில் நவம்பர் 24 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் 8-ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் புதன்கிழமை (நவம்பர் 25) உரையாற்றிய அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்பது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhood First) என்ற அணுகுமுறையையும், மகாசாகர் தொலைநோக்குப் பார்வையையும் இணைக்கும் தளமாகும். வளர்ந்து வரும் தீவிரமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான நமது கூட்டு திறன்களை மேம்படுத்த, மாநாட்டில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம்!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது பொருளாதார, ராஜதந்திர மற்றும் கடல்சார் செல்வாக்கைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, தெற்காசிய நாடுகளுடனான சீனாவின் அதிகரித்து வரும் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்கள் தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.
சர்வதேச வர்த்தகம், எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துக்கு இந்தியப் பெருங்கடல் முக்கியமான பாதையாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் இந்தப் பிராந்தியத்தில் மாலத்தீவு முக்கியமான புவியியல் அமைவிடத்தைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பையும், கடல்வழிப் போக்குவரத்தையும் உறுதி செய்வதில் மாலத்தீவுடன் இணைந்து செயல்பட இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மாலத்தீவு அதிபரின் பாகிஸ்தான் பயணத்துக்குப் பிறகு மாலத்தீவில் இந்தியா!
இதற்கிடையே, நவம்பர் 24-ஆம் தேதி கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக மாலத்தீவு பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் துறை அமைச்சர் ஹசன் ரஷீத்தை அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அண்மையில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முய்சுவின் பாகிஸ்தான் பயணத்துக்குப் பிறகு இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும். இதனால் அஜித் தோவலின் இந்தப் பயணம் ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. முய்சு அதிபராகப் பொறுப்பேற்ற ஆரம்பகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகும், மாலத்தீவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர இந்தியா விரும்புவதை இந்தச் சந்திப்பு வெளிப்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இணைந்து செயல்படும் நாடுகள்!
இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பிராந்திய நாடுகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் மூலம் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொரீஷியஸ் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ‘மகாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்தார். Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions என்பதன் சுருக்கமான இந்தத் திட்டம், உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதையும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு மூலம் இந்த இலக்குகளை நடைமுறைப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்ட அஜித் தோவல், உறுப்பு நாடுகளின் பொதுவான இலக்குகளை அடையத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நடத்துவதற்காக மாலத்தீவு அரசுக்கு நன்றியும் தெரிவித்தார்.




