தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: காகர்லா உஷா தலைமையில் விசாரணைக் குழு!

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழக அரசு உள் புகார் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

காகர்லா உஷா தலைமையில் விசாரணைக் குழு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரைத் தொடர்ந்து, தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரை விசாரிக்க உள் புகார் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை (G.O.Ms.No.731) கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பொதுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள்!

இந்த விசாரணைக் குழுவின் தலைவராக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ். மதுமதி ஐஏஎஸ், சட்டத்துறை செயலாளர் பி. சுமதி மற்றும் சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு!

அரசாணையின்படி, இந்தக் குழு 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும், தடைசெய்யும் மற்றும் புகார்களுக்குத் தீர்வுகாணும் சட்டம், 2013-ன் (POSH Act) விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையும் நடைபெறுகிறது!

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 75, 78 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் குற்றவியல் விசாரணையைத் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் மேற்கொள்வதாகவும், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறை ஐஜி (நிர்வாகம்) என். காமினி விசாரணையைக் கண்காணிப்பதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காவல்துறை விசாரணைக்கு இணையாக, மாவட்ட ஆட்சியரின் புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு தனியாக உள் புகார் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.