தேன் என்று சொன்னதுமே நம்முடைய நினைவுக்கு வரும் அதன் இனிப்புச் சுவை நாக்கில் நீர் ஊற வைக்கிறது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தற்போது செயற்கைத் தேன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கும் கசப்பான செய்தி வெளியாகியுள்ளது.
நமது பாரம்பரிய மருத்துவத்தில் தேனுக்கு தனிச் சிறப்பான இடமுண்டு. பல சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ள தேன்தான் முக்கிய துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சில நோய்களுக்கு தேனே நேரடி மருந்தாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மருந்துப் பொருளாகவும் உணவுப் பொருளாகவும் திகழும் சிறப்புக்குரிய தேனை செயற்கையாக தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கும் மத்திய அரசின் அறிவிப்பு, தேன் உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
புவிசார் அடிப்படையில் தேன் உற்பத்திக்கு நாட்டிலேயே தனிச் சிறப்புடன் திகழ்வது கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் பகுதிதான். இங்கு உற்பத்தியாகும் தேன் உள்நாட்டிலும் உலக அளவிலும் புகழ்பெற்றதாகும். இங்கு ஏராளமான விவசாயிகள் எந்த கலப்படமும் இல்லாமல் இயற்கை முறையில் தேனை உற்பத்தி செய்யும் பணிகளை செய்து வருகின்றனர். இதற்காக மரக் கூண்டுகளில் தேனீக்களை வளர்த்து அவை பூக்களில் இருந்து எடுத்து வரும் தேனை அடைகளில் இருந்து பிழிந்தெடுத்து சேகரிக்கிறார்கள். பின்னர் அவற்றை சிறுசிறு புட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு மாறாக செயற்கை முறையில் தேனை தயாரிக்க உணவு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது என தேன் உற்பத்தி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரசாயனப் பொருட்களைக் கொண்டு தேனைத் தயாரித்தால் பல கொடிய நோய்களுக்கே வித்திடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்
அதே நேரத்தில், தேன் உற்பத்தியை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தேன் விவசாயிகளும் தொழிலாளர்களும் வேலையிழக்க நேரிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதற்குப் பதிலாக இயற்கைத் தேன் உற்பத்திக்கு மத்திய அரசு உதவிக் கரம் நீட்டினால் இன்னும் அதிக அளவில் தேனை உற்பத்தி செய்து நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே செய்கைத் தேன் உற்பத்திக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்யும் இனிப்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே தேன் உற்பத்தியாளர்களின் இப்போதைய முக்கியக் கோரிக்கையாக உள்ளது.