மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; முதியவர் கைது

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு…

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார் . இதனையடுத்து, நேற்று இரவு சேலத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேட்டூர் அணையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும், சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.


இந்நிலையில் மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண் சிக்னலை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது செல்போன் எண் மேட்டூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து முதியவரை கைது செய்த போலீசார் மேட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில்  சிறுமுகைப் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மகாலிங்கம் (55), என்பதும், குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதியவர் மகாலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.