தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? அன்புமணி கண்டனம்!

அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் குறைவான விலையில் பால் கிடைக்கும் போது, அதை முழுமையாக கொள்முதல் செய்யாமல், கர்நாடகத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக பால் உற்பத்தியாளர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழ்நாட்டு உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பால் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களின் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் தினமும் 1.70 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் முதல் 34 லட்சம் லிட்டர் வரை தான் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தியில் 17.60% முதல் 20% வரை தான். ஆவின் நிறுவனம் நினைத்தால் தமிழ்நாட்டில் அதன் பால் கொள்முதல் அளவை இரட்டிப்பாக்குவது கூட சாத்தியம் தான். ஆனால், அதைச் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து பால் கொள்முதல் செய்யும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததைத் தொடர்ந்து பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையுடன் கடந்த 2023ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் கூட கட்டுபடியாகக்கூடிய விலை அல்ல.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 கொள்முதல் விலையுடன், ரூ.5 ஊக்கத் தொகை சேர்த்து ரூ.47 வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.38க்கும் ஒரு லிட்டர் பசும்பால் கிடைக்கும் நிலையில், அதைக் கொள்முதல் செய்யாமல் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.2 அதிக விலை கொடுத்து பசும்பாலை கொள்முதல் செய்வதும், அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துச் செலவாக லிட்டருக்கு ரூ.3 செலவழிப்பதும் வணிகரீதியாக அறிவார்ந்த செயல் அல்ல. ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் பாலை கர்நாடகத்திலிருந்து ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால் தினமும் ரூ.50 லட்சமும், ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடியும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.525 கோடிக்கும் கூடுதலாக இழப்பை சந்தித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டால், ஆண்டு இழப்பு மேலும் ரூ.200 கோடி வரை அதிகரிக்கக் கூடும். அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆவின் நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு முடிவை ஆவின் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் எதற்காக எடுத்தன? என்பதை உழவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான பால் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தான் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு வகை செய்யும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை தான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பின் 2023ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையும் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. கடைசியாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 25 மாதங்களாகும் நிலையில், அதன்பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

அதேநேரத்தில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவும் கூட ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும். சிக்கலுக்குத் தீர்வு என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக அண்டை மாநிலத்திற்கு சென்று அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வது சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்கவே வகை செய்யும். எனவே, கர்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்; மாறாக, பசும் பால் கொள்முதல் விலையை கர்நாடகத்திற்கு இணையாக லிட்டருக்கு ரூ.45 வீதம் உயர்த்தி வழங்குவதன் மூலம் கொள்முதலை அதிகரிக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.