மதுபானங்களை பாட்டிலில் அடைத்து விற்கும்போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்ய பொதுமக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என ஆவின் நிறுவனம் தெரிவித்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக்கில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது, ஆவின் பாலை மட்டும் ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது என கேள்வி எழுப்பினர்.
மதுபோதையில் உள்ளவர்கள் பாட்டிலை கவனமாக கையாளும்போது, சுயநினைவுடன் இருக்கும் மக்களால் பாட்டிலை கையாள முடியாதா எனவும் வினவினர்.
இது தொடர்பாக, மீண்டும் ஆலோசனை நடத்தி புதிய அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







