கோவில்களை இடிப்பதுதான் திராவிட மாடலா என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை, கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்தித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகரமாக 8 வருடத்தைக் கடந்துள்ளது. இதில், பாஜகவின் சாதனையை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
இந்தியாவும் பிரதமர் மோடியும் உலக அளவிலான தலைவராக உருவெடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி ஆத்ம நிர்பார், மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலம் புகழ் பெற்றுள்ளார். பொருளாதார அளவிலும் இந்தியா முன்னேறி வருகிறது. கடந்த ஆட்சிகளைவிட சிறந்த அரசாக செயல்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தாக்குதலில் மக்கள் தவித்து வந்தபோது தடுப்பூசியை இந்தியாவே தயாரித்து 52 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இது இந்தியாவுக்கும் பிரதமருக்கும் பாராட்டுகளைக் கொடுத்துள்ளது. இலவச காஸ் சிலிண்டர், இலவச கழிப்பறைகள், ஆவாஸ் யோஜனா, கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கிய திட்டம், முத்ரா திட்டம், சாலை வியாபாரிகளுக்கான கடன் திட்டம் என கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுவரை தேசம் கண்டிராத சிறப்பான பிரதமராக மோடி உள்ளார். அதிகப்படியான மக்கள் நலத் திட்டங்களை எந்த பிரதமரும் கொண்டு வந்தது இல்லை. மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு படையை பலப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், சீனா போன்றவற்றில் இருந்து வரும் தாக்குதல்களைத் தடுத்துள்ளோம். காஷ்மீரில் அமைதியைக் கொண்டு வந்துள்ளோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள திமுக அரசு விலையை குறைக்காமல் வெறும் குற்றம் மற்றும் சாட்டி வருகிறது.
திமுக ஒரு குடும்ப கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒரு சேவை கட்சியாக உள்ளது. அதேபோல, திமுக அரசு கவர்னருக்கு மரியாதை கொடுக்காத செயலில் ஈடுபடுகிறது. நீட் மசோதா, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் ஆளுநருக்கான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கோவில்களை இடிப்பது தான் திராவிட மாடலா?. திமுக அரசு தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினார்கள் என தெரியவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக தெரிவித்தது. அதேபோல, கூலிப்படை ரவுடிசம் அதிகரித்துள்ளது. திமுக அரசு காவல் துறையினரை தவறாக பயன்படுத்தும் அரசாக உள்ளது.
திமுக அராஜக செயலில் ஈடுபடுகிறது. அதை மக்களுக்கு எடுத்து சொல்லும் தைரியம் பாஜகவிற்கு உள்ளது. இதை அண்ணாமலை தலைமையிலான மாநில பாஜக சிறப்பாக செய்து வருகிறது. மோடி திட்டத்தை பிரச்சாரம் செய்வது போல திமுகவின் அராஜகத்தையும் வெளிப்படுத்துகிறோம். மோடி நண்பனாக உள்ளார். தமிழை முன்னிறுத்தி எங்கும் பேசுகிறார். மக்களுடைய பார்வைக்கு திமுக நல்ல கட்சியாக இல்லை. பாஜக சேவை அமைப்பாக கொரோனா காலத்தில் செயல்பட்டது.
திமுகவின் செயல்கள் தொடர்ந்து பரப்பப்படும். ஊழல் இல்லாத ஆட்சியாக பாஜக உள்ளது. இதுவே நாட்டின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளது என்றார்.
-ம.பவித்ரா