உத்தரப்பிரதேச மாநிலம், ஞானவாபி மசூதியில் நடக்கும் உண்மையை கண்டறிய கோரி தொடரப்பட்ட மனுக்களை அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி வளாகத்தில் உள்ள சுவரில் இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையொட்டி அங்கு நடந்த கள ஆய்வின்போது அந்த மசூதியில் இருந்து ஓர் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றம் வரை அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் உள்ள உண்மையை கண்டறிய உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற அல்லது தற்போது பணியில் உள்ள நீதிபதி தலைமையிலான கமிட்டியை அமைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது இதுகுறித்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த கோரிக்கை தொடர்பாக சுமார் 7 பேர் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு, தொல்லியல் துறை ஆகியோரை எதிர் மனுதாரராக குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தனர்.
“இந்த விவகாரம் இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல், உலகளவில் இரண்டு மதங்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளது. அதன் காரணமாக கமிட்டி அமைத்து உரிய விசாரணை நடத்துவதன் மூலம் உண்மை வெளியாகும்.” என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையின்போது மாநில அரசு மற்றும் தொல்லியல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் இதை எதிர்த்து வாதிட்டனர். “இதே வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இதை இங்கு விசாரிக்க முடியாது.” என்று அவர்கள் கூறினர். இதையடுத்து நீதிமன்றம் அந்த மனுக்களை நிராகரித்தது.
-ம.பவித்ரா







