ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல்நிலையத்தில் ராஜாகண்ணு என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் கொல்லப்பட்டதையும், இதற்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி ( படத்தில் செங்கனி) , வழக்கறிஞர் சந்துரு நடத்தும் சட்டப்போராட்டம்தான் ஜெய் பீம் படத்தின் கதை. ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை எடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக உண்மை சம்பவத்தை ஒரு புனைவு கதையாக மாற்றும்போது, கதையோட்டத்தில் சுவாரஸ்யம் குறைந்தே இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் இச்சவாலை இயக்குநர் முறியடித்திருக்கிறார். உண்மையை நெஞ்சுக்கு நெருக்கமாகவும், அதே சமயத்தில் கதையின் விறுவிறுப்பு குறையாமலும் படம் நகர்கிறது. த.செ ஞானவேலின் முந்தைய படமான ’கூட்டத்தில் ஒருவன்’ படத்தைவிட இத்திரைப்படத்தில் ஒரு சிறந்த படைப்பாளியாக அவர் முதிர்ச்சியடைந்திருக்கிறார். ஒரு சட்டப்போராட்டத்தை பற்றிய கதையை கையாளும்போது, தேவைப்படும் ஆழமான ஆய்வை இயக்குநரும் அவரது குழுவும் சமூகப் பொறுப்புணர்வுடன் கையாண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

குறிப்பாக இருளர் சமூகத்தின் வாழ்வியலை அவர்களின் பார்வையிலிருந்தே இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான செங்கனியும் அவரது கணவர் ராஜாகண்ணுவும் வயல் வரப்பில் புகைபோட்டு எலிகளை பிடிப்பதுதான் படத்தின் முதல் காட்சியாக அமைந்திருக்கிறது. கடுமையான உடல் உழைப்பை செலுத்தும் இருளர் மக்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்துகிறார்கள் என கதை தன் போக்கில் சொல்கிறது.
படத்தில் இடம்பெறும் நுணுக்கமான விவரங்கள், வழக்கறிஞர் சந்துரு ( சூர்யா) அறிமுக காட்சியில், அவருக்கு பின்னால் காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படம் இடம் பெறுவது. சந்துரு அணிந்திருக்கும் கண்ணாடி அம்பேத்கரின் கண்ணாடியைப்போல் வடிவமைத்திருப்பது இப்படி பல விஷயங்களை காட்சிப்படுத்துதலில் இயக்குநர் சேர்த்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுமே செய்வதில்லை என்று பரவலாக பேசப்படும் குற்றச்சாட்டை பிரச்சார தொனியில் படம் எடுத்து பதிலளிக்காமல், நேர்த்தியான கதையை உருவாக்கி பதிலளித்திருக்கிறார் இயக்குநர். காவலர்கள் ஜாதி கேட்கும் காட்சியில் படம் தொடங்கி ராஜாகண்ணு மகள் கால் மேல் கால் போட்டு அமரும் காட்சியில் படம் முடிவது கிளாசிக்.
சில இடங்களில் மட்டும் உணர்ச்சிக்காக காட்சிகள் திணிக்கப்பட்டது போல் உள்ளது. பழங்குடியினர் மீது பொய் வழக்கு எப்படி ஜோடிக்கப்படுகிறது, விசாரணையின்போது காவல்துறையினரின் சித்திரவதை எப்படி இருக்கிறது என்பதை உணர்வு ரீதியாக பார்வையாளர்களுக்கு கடத்த இயக்குநர் முயற்சித்திருக்கிறார். பார்வையாளர்கள் மனதையும் மனசாட்சியையும் உலுக்கும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பி இருக்கிறது.
ஒரு அரசியல் தெளிவு செரிவாக இருக்கும் படத்தில், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை இப்படி எல்லா விஷயங்களுமே நேர்த்தியாக இருக்கிறது. இருளர் மக்கள் வசிப்பிடத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், வழக்காடு மன்றத்தை காட்சிப்படுத்திய விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாக படம் சிறந்த படைப்பாக வெளியாகி இருக்கிறது.
நடிகர்கள்
வழக்கறிஞர் சந்துருவைப்போலவே சூர்யா நடித்திருக்கிறார். ஹிரோயிஸம் வெளிப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது. ராஜாகண்ணாக நடித்திருக்கும் மணிகண்டனின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. இக்கதாபாத்திரத்திற்காக அவர் செய்திருக்கும் உழைப்பு வெளிப்படையாக தெரிகிறது. இருளர் மக்களின் வாழ்வியலை ஆழமாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார் மணிகண்டன். ராஜா கண்ணுவை அடித்தே கொல்லும் காவலர்களாக வரும் குருமூர்த்தி ( தமிழ்), வீராசாமி (சுப்ரமணி) கிருபாகரன்( பாலா ஹாசன்) ஆகியோரின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக அமைந்திருக்கிறது. செங்கனியாக நடித்திக்கும் லிஜோ மோல் ஜோஸ் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
‘அதிகார திமிருல எங்கள அடிச்சே கொன்னாலும் ஏன்னு கேக்க இங்க யாரும் வரமாட்டாங்களானு ஒரு பழங்குடியினப் பெண் நம்மை உலுக்கி கேட்கும் கேள்விதான் இந்த ஆட்கொணர்வு மனு‘ என்று சூர்யா பேசும் வசனம் நமது மனசாட்சியை உலுக்கும் வசனமாக அமைந்திருக்கிறது. மக்களை வெறும் உணர்ச்சிவசப்படுத்தாமல், ஒரு ஆழமான புரிதலை சிறந்தபடைப்பு மூலம் ஏற்படுத்த முடியும் என்பதை இயக்குநர் நிரூபித்திருக்கிறார்.
-வாசுகி








