தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா வைரஸை விட அதி வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதால், இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இன்று பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 18,129 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றின் முதல்நிலை பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேலும், 24 பேரின் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது எனவும், தொற்று கண்டறியப்பட்டவர்களில் 2 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என கூறினார். இதனால், பொதுமக்கள் அச்சமடையவில்லை என கூறிய அவர், சென்னையில் 26 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும் மதுரையில் 4 பேருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.







