”ஆளுநரின் செலவு கணக்கில் விதிமீறல்” – சட்டப்பேரவையில் நிதியமைச்சர் குற்றச்சாட்டு

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.5 கோடியான பிறகு, தொடர்ந்து விதிமீறல் நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால…

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.5 கோடியான பிறகு, தொடர்ந்து விதிமீறல் நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

அதன் பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செலவு கணக்கு குறித்து சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ”ஆளுநருக்கு செயலகம், வீட்டு செலவு உள்ளிட்ட 3 வகைகளில் அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளுநர் பொறுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2 கோடியே 41 லட்ச ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடை, இந்த ஆண்டு 3 கோடியே 60 லட்ச ரூபாயாக முதலமைச்சர் உயர்த்தியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசு VS ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் தொகை 5 கோடியான பிறகு, தொடர்ந்து விதிமீறல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆளுநர் வீட்டு செலவு கணக்கில் அட்சய பாத்திரா என்ற பெயரில் 5 கோடி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த 5 கோடி, அட்சய பாத்திரா திட்டத்திற்கு செல்லவில்லை.

ஆளுநர் மாளிகைக்கு இதுவரை மொத்தமாக செலவிடப்பட்டிருப்பது 18 கோடி ரூபாய். அதில் 11 கோடி ரூபாய் எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் அரசுக்கு தெரியாது. இதை தான் விதிமீறல் என்கிறேன். செப்டம்பர் 2021 வரைக்கும் எங்களுக்கு தெரிந்த அளவு இந்த நிதி எல்லாம் ஏதோ ஒரு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிதி என்பது தெரிய வருகிறது.

கர்நாடகாவில் 25 லட்ச ரூபாய், கேரளாவில் 25 லட்சம் ரூபாய், மேற்கு வங்கத்தில் 25 லட்ச ரூபாய், உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் என ஆளுநருக்கு நிதியாக வழங்குகிறார்கள். UPSC மாணவர்கள் கூட்டத்திற்காக 5 லட்ச ரூபாய், தேநீர் விருந்துக்காக 30 லட்ச ரூபாய், ஊட்டியில் கலாச்சார நிகழ்ச்சிக்காக 3 லட்ச ரூபாய் ஆகியவை மட்டுமே செப்டம்பர் 2021-க்கு பிறகு ஆளுநர் மாளிகை செலவு கணக்காக காட்டப்பட்டுள்ளது.

ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும், ஒரே செலவுக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்ற நிதித்துறையின் விதியை மீறி, மாதம்தோறும் 58 ஆயிரம் ரூபாய் வீதம், 6 மாதத்திற்கு 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் சென்றுள்ளது. ராஜ்பவனில் அனைத்து பணியாளர்களுக்கும் போனஸ் என்ற பெயரில் ரூ.11 லட்சம் மற்றும் ரூ.14 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

நிதித்துறையின் விதிக்கு மாறாக, பல செலவுகளுக்கான நிதியை நிதித்துறை வழங்கியிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். விதிமுறை மீறல்கள் தடுக்கப்பட்டு இனிமேல் விதியில் இருக்கும் செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்ற விதிமுறையை கொண்டு வருவேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.