29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!

இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடூரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷர்மிளா.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது அந்நாட்டு மக்களையும் உள்ளடக்கியது. இதற்காக தங்கள் இன்னுயிரைக்கூட தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பவர்கள் ராணுவத்தினர். குறிப்பாக போர் மற்றும் தீவிரவாத தாக்குதலால் உயிரிழக்கும் ராணுவத்தினரின் தியாகம் என்றும் போற்றுதலுக்கு உரியது. இதன்காரணமாகதான் சாலையில் ராணுவ உடையுடன் செல்லும் வீரர் யாரையாவது பார்க்கும்போது, பெரும்பாலாலான மக்களுக்கு மரியாதையுடன் கூட சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்திய நாட்டின் வடகிழக்கு பகுதியில் வாழும் மக்களுக்கோ, ராணுவத்தினரின் கால் தடம் சத்தம் கேட்டாலே, அடுத்த நொடி தங்கள் உயிர் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம்தான் மேலெழுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பேரச்சத்தை உலகறியச் செய்த சம்பவம்தான், மாலோம் படுகொலை. சரியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2ம் தேதி, மணிப்பூர் மாநிலம் மாலோம் என்ற பகுதியில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர் அப்பகுதி மக்கள். அப்போது தீடீரென இந்திய ராணுவத்தின் துணைப்படையான, அசாம் துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். இதில் 34 பேர் படுகாயமடைந்தனர். மாலோம் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், இதன்காரணமாக ராணுவத்தினர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் இந்திய ராணுவத்தினர் இதுவரை ஒப்படைக்கவில்லை. அதேபோல் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவர் கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. எந்த குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழக்க, காரணமாக இருந்த மாலோம் படுகொலை அடுத்த கட்டத்திற்கு முன்னேறவிடாமல், தடுப்பது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான்.

இச்சட்டத்திற்கு எதிராக அகிம்சை வழி போராட்டத்தினால் முற்றுபுள்ளி வைக்க முயன்றார் 28 வயதான பெண் ஒருவர். லோயிடோங்ப்மின் என்ற மனித உரிமை குழுவில் பயிற்சியாளராகப், பணியாற்றிவந்த அந்த பெண் மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினருக்கு எதிரான, வழக்குகளை ஆவணப்படுத்தவும், ராணுவத்தினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை நேர்காணல் செய்யவும், கொல்லப்பட்ட பொதுமக்களின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் குறித்த ஆவணங்களை தயாரிப்பதில் மும்முரமாக செயல்பட்டுவந்தவர். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்த அந்த பெண் நினைத்தது எல்லாம் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவவேண்டும் என்பதுதான். துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாளே மாலோம் படுகொலை என்று அழைக்கப்படுவதைப் பற்றி அவள் அறிந்தாள். பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் தோய்ந்த உடல்களின் படங்கள் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

அப்போது அவளுக்கு தோன்றிய ஒரே விஷயம் காந்தி மேற்கொண்ட அகிம்சை வழியிலான உண்ணாவிரத போராட்டம்தான். இதனால் தான் சாகமாட்டோம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனையடுத்து நவம்பர் 2ம் தேதி நடந்த மாலோம் படுகொலை எதிராக நீதிகேட்க கிளம்பினார். இச்சம்பவம் நடந்து சரியாக நவம்பர் 3ம் தேதி, தன்னுடைய தாய் ஐரோம் ஓங்பி சகி சமைத்த, உணவை முதலும் கடைசியுமாக சாப்பிட்டார். பின்னர் இந்திய ராணுவத்தினரால் படுகொலைச் செய்யப்பட்ட மாலோம் பேருந்து நிலையம், அருகே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பபெறு என்ற பதாகையுடன் சென்று அமர்ந்தார்.

அதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை சூழ்ந்து உட்காரத் தொடங்கினார்கள். சிலர் வேடிக்கை பார்த்தப்படி கடந்து சென்றனர். 2000ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி தொடங்கி அந்த பெண்ணின் உண்ணாவிரதப் போராட்டம், வெறும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாக முடிவடைந்துவிடாமல், தொடர்ந்து 16 ஆண்டுகள், நாள் கணக்கில் சொல்லவேண்டும் என்றால் 5 ஆயிரத்தி 574 நாட்கள் நீடித்தது. இதுவே உலகின் மிக நீண்ட உண்ணாநிலை போராட்டம் என்றழைக்கப்படுகிறது. சொந்த நாட்டு மக்கள் மீதான, ராணுவத்தினரின் வன்முறைகளை கண்டித்து அன்று அந்த பெண் தொடங்கிய, உண்ணாவிரத போராட்டம்தான் இந்திய ராணுவத்தில் மற்றொரு கோர முகத்தை உலகறிய செய்ய அடிதளமிட்டது. அவர்தான் இந்தியாவின் இரும்பு பெண் என்றழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா.

மனிப்பூர் மாநிலம் கொங்பால் எனும் ஊரில் மார்ச் 14ம் தேதி 1972ம் ஆண்டு, ஐரோம் சி நந்தாவுக்கும் இரோம் ஓங்பி சக்திக்கும் பிறந்தவர், இரோம் சானு ஷர்மிலா. அப்பா கால்நடை மருத்துவமனை ஊழியர் ஆவார். இரோம் ஷர்மிளாவுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். அண்ணன் இரோம் சிங்கஜித் சிங், தங்கை போராட்டத்தைத் தொடங்கிய பின்னர், அவரைப் பார்த்துக்கொள்வதற்காகத் தன் பணியை உதறித் தள்ளியவர். வெள்ளை நிறம், சுருட்டை முடி, நீளமான முகம், சிறிய கண்கள் என சாதாரணமான தோற்றம் கொண்ட ஷர்மிளாவின், ஆர்ப்பாட்டம் இல்லாத உண்ணாவிரத போராட்டம், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியது. இரோம் ஷர்மிளா போராட்டத்தை தொடங்கியபோது, காந்தியையும், நெல்சன் மண்டேலாவையும் அவரின் வழிகாட்டியாக அவர் எடுத்துக்கொண்டார். மத்திய அரசு ஆயுதப்படை அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை உண்ண மாட்டேன், தண்ணீர் குடிக்க மாட்டேன், கண்ணாடியில் முகம் பார்க்க மாட்டேன், தலை சீவமாட்டேன் என கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

அவர் போராடத் தொடங்கிய 3வது நாளில் காவல் துறையினால் உயிரை மாய்த்துக் கொள்ள முயலுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் உடல் நிலை வெகு வேகமாகக் மோசமடையத் தொடங்கியது. சிறையில் இருந்த போது, வலுக்கட்டாயமாக இரோம் ஷர்மிளாவுக்கு உணவு செலுத்த முன்வந்தார்கள் மருத்துவர்கள். ஆனால் அதற்கு கடுமையாக எதிர்ப்பை ஷர்மிளா தெரிவித்தார். இதனைத் நவம்பர் 21ம் தேதி நாசித்துவாரம் வழியாக அவருக்குத் வலுகட்டாயமாக திரவ உணவு செலுத்தப்பட்டது. அரிசி கஞ்சி, காய்கறி கூழ், பால் பவுடர் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டது. நாவால் ருசித்து, உணவு குழாய் வழியாக உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்ற கொள்ளை உறுதியாக இருந்தார் அவர். நாசித்துவாரம் வழியாக ஷர்மிளாவுக்கு உணவு செலுத்தப்பட்டதால், அவரின் உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கின. தொடர் உண்ணாவிரதம் காரணமாக, மாதவிடாய் முற்றிலுமாக நின்று போனது. ஆயினும், தன் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. ஆண்டுகள் பல கடந்தும் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் தொடர்ந்தது. வருடா வருடம் காவல் துறை அவரைக் கைது செய்வதும், பின்பு ஓர் ஆண்டு முடிவில் விடுவிப்பதும், மறுபடி ‘உயிரை மாய்த்துக் கொள்ள முயல்கிறார்’ என குற்றம் சாட்டி சிறையில் அடைப்பதும் தொடர்ந்தது. ஆனால் இவை எதற்கும் இரோம் ஷர்மிலா அஞ்சவில்லை. பலமுறை தன்னுடைய உடல் நிலை மிகவும், மோசமடைந்த போதும் இரோம் ஷர்மிளா கொள்கையில் உறுதியாக இருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல, அவரது உறுதி மொத்த தேசத்தின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. தனி ஒருவராய் நின்றிருந்த இரோம் ஷர்மிளாவின் பின்னால் மாணவர்களும் மனித உரிமைப் போராளிகளும் அணி திரளத் தொடங்கினர். இந்நிலையில்தான் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தின் பெயரில் மற்றொரு கோரச் சம்பவம் மணிப்பூரில் நடந்தது. 2004ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி இரவு, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பாமன் கம்பு கிராமத்தின், தன் குடும்பத்தினருடன் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தார், 32 வயதான தங்கம் மனோரமாவும் அவரின் குடும்பத்தினரும். பழங்குடியின பெண்ணான அவர் அசாமில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு உதவியதாக கூறி, இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரால் வீட்டிலிருந்து தரதரவென்று இழுத்துவரப்பட்டார். பின்னர் நான்கு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் மனோராம்மாவின் உடல் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக இருந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் மனோரம்மா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு மற்றும் பிறப்புறுப்பு உட்பட் உடலில் மொத்தம் 16 இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கொடுர சம்பவம் நடந்தேறிய ஒரு சில நாட்களில் உடலில் ஆடைகள் ஏதுமின்றி ‘இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி’ என்று எழுப்பட்டிருந்த பதாகைகளைத் தாங்கியபடி மணிப்பூர் பெண்கள் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகம் முன்பு போராடினர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. மேலும் இந்திய ராணுவத்தின் அகோரமான முகத்தை உலகிற்கு காட்டியது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரிய அளவில் எதிர்ப்பலைகளை நாடெங்கும் உருவாக்கியது. ஆயுதப் படை அதிகார சட்டத்தின் பெயரில் நடக்கும் அத்துமீறல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது, ‘இந்த சட்டத்தை நீக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கும் குரல்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. இரோம் ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பெருகினர்.

நாட்டின் வடகிழக்கு மற்றும் ஐம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில், இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என நாடெங்கிலும் கோரிக்கை வலுத்துள்ளது. சட்டத்தை திரும்பப்பெற அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் “இந்த சட்டம் இந்தியாவின் பிம்பத்தின் மீது விழுந்திருக்கும் கரும்புள்ளி என குற்றம்சாட்டியுள்ளார் நாகாலாந்து முதலமைச்சர் நெபியூ ரியோ. இவ்வளவு எதிர்ப்புகளுக்கும் இடையில் AFSPA சட்டம் விலக்கி கொள்ளப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? சிறப்பு அதிகாரச் சட்டம் உருவானது எப்படி? என்பதற்கான பதில் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ளது. 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் வலுப்பெற்றபோது, அப்போதைய கவர்னர் ஜெனரல் லின்லித்கோவால் (Viceroy Linlithgow) இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட அடக்குமுறை சட்டத்தின் சாரம்சம்தான் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்.

இந்தியர்களை அடக்க ஆங்கிலேயேர்களால் கொண்டுவரப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான், தற்போது 75ஆண்டுகால சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசால், இந்தியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இச்சட்டம் அமல்படுத்த முக்கிய காரணியாக இருந்தது அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்து. இது 1950களில் தனி நாடு கோரிக்கையை வலுவாக முன் வைத்தது. இதனை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாததால் ஆயுதம் தாங்கிய போராளிக்குழுக்கள் நாகாலந்து, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவில் உருவெடுத்தன. அசாம், மணிப்பூர் மாநிலங்களில் நிலவிய பதற்றமான சூழலை கட்டுப்படுத்தவும் போராளிக் குழுகளை சமாளிக்கவும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு 1958ல் ஒப்புதல் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்.

மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஏழு சகோதரிகள் மாநிலத்தில், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தொழில்வளர்ச்சி இன்றளவு குறைவாகவே உள்ளது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் நிலவிவரும் வறுமை காரணமாக ஆட்சியாளர்களை எதிர்த்த, வன்முறை நிகழ்வுகள் வடகிழக்கு இந்தியாவின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது என்றும் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டதே ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் என்றும் கூறுகிறது மத்திய அரசின் இணையக் குறிப்பு.

மாநிலங்கள் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட பகுதிகளில் கிளர்ச்சி, மோதல், தொடர் வன்முறைகள் நிகழும் பட்சத்தில் அதனை கையாள மாநில அரசு திணறினால், மத்திய அரசு தலையிட்டு சம்மந்தப்பட்ட பகுதியை தொந்தரவுக்குரிய பகுதியாக அறிவித்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்தும். அப்படி அறிவிக்கப்பட்ட மாநிலம் அல்லது பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது உரிய எச்சரிக்கைக்குப் பிறகு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், படைகளை பயன்படுத்தலாம். அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரியே என்கிறது இச்சட்டம். மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் இச்சட்டத்தால் முடியும். கைது நடவடிக்கைக்கு ஆளானவர்களை காலக்கெடுவின்றி அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கலாம். இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. சட்டத்தை எதிர்கொண்ட மாநிலங்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில்தான். அதனை தொடர்ந்து படிப்படியாக வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுராவுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

காலிஸ்தான் பிரிவினைவாதப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது இதே சட்டம் 1985-1994 வரை பஞ்சாபின் சில பகுதிகளில் அமலில் இருந்தது. இதேபோல 1990ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரிலும் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பும் பட்சத்தில் ராணுவம் திருப்பி அழைக்கப்படும். 2015ல் திரிபுராவிலும், 2018ல் மேகலாயாவிலும் இந்த சட்டம் திரும்பப்பெறப்பட்ட்து. ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களின் ஒருசில பகுதிகளிலும் இந்த சட்டம் இன்று வரை அமலில் உள்ளது. குறிப்பிட்ட கால அளவில் இந்த சட்டத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கும்.

நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நிகழும் கிளர்ச்சி மற்றும் தொடர் போராட்டங்களை அடக்க கொண்டுவரப்பட்ட, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உல்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் வலுப்பெற காரணமாக இருந்தது. அசாம் மாநிலத்தில் ‘தனிநாடு’ கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ‘உல்பா’ முக்கியமான அமைப்பாகும். ஏற்கனவே மக்களை பிரிவுப்படுத்தி அரசியல் செய்துவரும் உல்பாவுக்கு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மூலம், ராணுவம் மேற்கொண்ட வன்முறை சம்பவங்கள் மேலும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. அதேநேரம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத அசாம் போன்ற மாநிலங்களில், வேலைவாய்ப்புகளும், அசாம் அசாமியர்களுக்கே போன்ற தனி மாநில கோரிக்கை குரல்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

இதன் எதிர்விளைவாய் 1983ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அசாமில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நெல்லி உள்ளிட்ட கிராமங்களில் ரத்த சாட்சியாக மாறியது. நெல்லி உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்துவந்த கிராமங்களில், அரிவாள்களும், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் அஸ்ஸாம் இயக்கப் போராட்டக்காரர்களால் சூழப்பட்டது. அவர்களின் கண்ணில் தென்பட்ட குழந்தைகள், முதியோர் மற்றும் பெரும்பான்மையான பெண்கள் என அனைவரும் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த மனித வேட்டையில், வெறும் 6 மணி நேரத்துக்குள் 14 கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, 1800 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை 3,000 எனக் குறிக்கின்றன. பிரிவினைவாதிகளால் நடந்தேறிய நெல்லி படுகொலை என அழைக்கப்படும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர்ந்து அமலில் இருக்க முக்கிய காரணியாக மாறியது.

இந்த சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர் சந்தேகத்தின் பெயரில், இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்றுள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினால், ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கடந்த 28 ஆண்டுகளில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை ஆணையமான ஆம்னிஸ்டி (Amnesty) அமைப்பு தெரிவித்துள்ளது. சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மாறியுள்ள, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, இரோம் ஷார்மிளா மேற்கொண்ட போராட்டத்திற்கு பின்னால், மாணவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், இந்திய நாட்டின் மக்களும் திரண்டனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல், தன்னுடைய 16 ஆண்டுகால உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் மத்திய அரசு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பபெறும் எனும் பெரு நம்பிக்கையில் இருந்தார் இரோம் ஷர்மிளா.

இரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பிராந்திய கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக என ஆட்சிகள் மாறினாலும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து திரும்பபெறுவதே, ஒரே கொள்கையுடன்தான் இருந்தன. இந்நிலையில் இரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியபோது, பல்வேறு காலக்கட்டங்களில் பல அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தலில் நிற்க அவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை எல்லாம் அப்போது அவர் நிராகரிக்கவே செய்தார். இன்று அல்லது நாளை என்றாவது ஒருநாள் ஆயுதப்படை சிறப்பு சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த இரோம் ஷர்மிளா, கைது, பட்டினி, விடுதலை மீண்டும் கைது என்பதே அவரின் தொடர் வாழ்க்கையானது.

சிறந்த கடவுள் பற்றாளாரான இரோம் ஷர்மிளா, எப்போதும் தன் கஷ்டங்களை கடவுளிடம் முறையிடுவதை வழக்கமாக கொண்டவர். அப்படி ஒருநாள் பிராத்தனை செய்த ஷர்மிளா, இன்னும் எவ்வளவுநாள்தான் என் மீதான பரிசோதனை தொடரும், இன்னும் எவ்வளவு கஷ்டங்களை நான் அனுபவிக்கவேண்டும் என முறையிட்டார். இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரத போராட்ட உறுதி ஒரு கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. அவரின் போராட்ட களத்தில் திரளும் மக்கள், அன்றைய முடிவில் ஷர்மிளாவை தனிமையிலேயே விட்டனர். மணிப்பூர் மற்றும் வடகிழக்கும் மாநிலங்களில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், விலக்கிகொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை மற்றும் கொள்கை ஷர்மிளாவுடையது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. இந்த போராட்டம் ஒரு வெகுஜன போராட்டமாக இத்தனை ஆண்டுகளுக்கு பின்னால் மாறாமல் போனது. இரோம் ஷர்மிளாவுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில்தான் 2016ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி, தன்னுடைய நீண்டகால உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்து, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அவர். உடனே அவரை சூழ்நிலை நிரூபர் முன்னிலையில் ஒரு சொட்டு தேனை தன் கையால் எடுத்து, 16 வருடத்திற்கு பிறகு முதன் முறையாக சுவைத்து பார்த்தார் இரோம் ஷர்மிளா. அத்துடன் அவரின் உண்ணாவிரத போராட்டமும் முடிவுக்கு வந்தது. அப்போது பேசிய இரோம் ஷர்மிளா “என்னுடைய 16 ஆண்டு உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகும், மக்களின் மனநிலையில் எந்த மாற்றமும்மில்லை” என வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் தேர்தல் அரசியலில் நுழைந்து மணிப்பூர் முதல்வராகி, தன் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளப் போவதாகக் கூறினார். ஆனால், இவரது முடிவு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ‘குடியரசுத் தலைவரால் கூட அசைத்துப் பார்க்க முடியாத சட்டத்தை இவர் மணிப்பூர் முதல்வராகி மாற்றப் போகிறாரா?’ எனக் கேள்விகள் எழுந்தன. இவரின் 16 ஆண்டுகள் தியாகத்திற்கு அரசியல் ஆசை என்ற பட்டம் பூசப்பட்டது. அப்போது நடந்த மணிப்பூர் தேர்தலில் அவர் அப்போதைய முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டார். வெறும் 90 வாக்குகளே இரோமிற்கு கிடைத்தன. மணிப்பூர் மக்களே கூட தன்னை ஆதரிக்காதது அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. ஆனாலும், தன் முடிவில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. ‘ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை என் போராட்டம் தொடரும்’ என அறிவித்தார்.

இன்று, இரோம் ஷர்மிளா இயல்பான வாழ்க்கை நிலைமைக்கு திரும்பி இருக்கிறார். தன்னை காதலித்த பிரிட்டன் நாட்டை சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவர், கொடைக்காணலில் பதிவு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த 2019ம் ஆண்டு அன்னையர் தினத்தன்று, நிக்ஸ் சகி மற்றும் ஆட்டம் தாரா என இரட்டை பெண் குழந்தைகளுக்கு தயாரானர் இரோம் சர்மிளா. தற்போது பெங்களூரில் தன் குடும்பத்தினருடன் அமைதியான சூழ்நிலையில் வாழ்த்து வருகிறார் இரோம் ஷர்மிளா. அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டது மணிப்பூர் மக்களிடம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடவுளுக்கு நிகராக போற்றப்பட்ட இரோம் ஷர்மிளாவை, வசப்படத் தொடங்கினார்கள் மணிப்பூர் மக்கள். இந்தகாலகட்டத்தில் மணிப்பூர், நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், அங்கென்றும் இங்கென்றுமாக ஆயுதப்படையினரின் தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், அப்பாவி சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் எவ்வித விசாரணையும் இன்றி, வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தேசியளவில் பெரும் கவனம் பெற்றது. நைபியு ரியோ உடனடியாக மத்திய அரசு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி, நாகாலந்து சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு பதில் எந்த சட்டத்தினால், 15 சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டனோரோ, அதே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் ஆறுமாத காலம் நீடித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தினால், நிலவிவரும் இந்திய ராணுவத்தின் கொடுரச் செயல்களை எதிர்த்து உணவும் நீரும் இன்றி உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி தோல்வியை கண்டார் இரோம் ஷர்மிளா. இவரது போராட்டத்திலும் தேர்தல் அரசியலிலும் இவர் தோற்றிருக்கலாம். ஆனால் இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடுரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷ்ர்மிளா. அவர் தன்னுடைய போராட்ட முறையிலும், மக்கள் மத்தியில் போராட்ட குணத்தை வளர்க்கமுடியாமல் போனதிலும் இரோம் ஷர்மிளா தோற்றதாக கூறப்படலாம். ஆனால் மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அவரின் பின்னால் எந்த பிரதிபலனும் பாராது திரண்ட மக்களே, காந்தியின் போராட்டத்தை வெற்றியாக மாற்றினார்கள். அப்படிப்பார்த்தால் தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல ஜனநாயகம்தான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading