மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு நாடகம் நடத்துவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத நந்தகோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மக்கள் சுதந்திரமாக நடமாட, மத்திய அரசு அளித்த 180 கோடி தடுப்பூசி தான் காரணம் எனவும், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க பிரதமர் மேற்கொண்ட முயற்சியை அனைவரும் பாராட்ட வேண்டுமெனவும் தெரிவித்தார். மேலும், ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் விமான சேவை இயக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உக்ரைன் மாணவர்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பெருமை பேசுவது நியாயமானது இல்லை எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டு மீனவர்களை பாஜக அரசு பாதுகாப்பதாகவும், மீனவர்கள் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








