30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலிய உணவுகளில் அனைவராலும் விரும்பப்படும் உணவாக பீட்சா இருந்து வருகிறது. சீஸ், காய்கறிகள் போன்ற கலவைகளுடன் பார்ப்பதற்கே கவரும் வகையில் அது தயாரிக்கப்படுகிறது. பீட்சாவை நாம் எவ்வளவு விரும்புகிறோமோ அவ்வளவு உடலுக்கு நல்லதல்ல, அவை உடல் எடையை அதிகரிக்கும் என ஒரு தரப்பினரால் சொல்லப்படுகிறது.
பீட்சாவில் பொதுவாக அதிக கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என உணவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பீட்சா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த ஒரு நபரை பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சமீபத்தில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் சவாலில் ஒரு நாளைக்கு மூன்று முறை பீட்சா சாப்பிட்டு உடல் எடையைக் குறைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயன் மெர்சர் என்ற பயிற்சியாளர் 30 நாள் எடை குறைப்பு சவாலின் போது காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளை உணவையுமே பீட்சாவாக எடுத்துக் கொண்டார். இதன் படி மூன்று வேலைக்கு 10 துண்டுகள் வீதம் பீட்சாவை சாப்பிட்டார்.
மெர்சர் இந்த எடை குறைப்பு சவாலின் போது பீட்சாவைத் தவிர அனைத்து விதமான நொறுக்குத் தீணிகளையும் கைவிட முடிவு செய்தார். கலோரி பற்றாக்குறை மற்றும் ஆரோக்கியம் இவற்றை கருத்தில் கொண்டு அனைத்து வகையான நொறுக்குத் தீணிகளையும் கைவிட்டு தனக்கு மிகவும் பிடித்த உணவான பீட்சாவை மட்டும் உட்கொண்டு வந்தார்.
இது குறித்து அவர் கூறியபோது “ உடல் எடையை குறைக்க முற்பட்டபோது அனைத்து நொறுக்குத் தீணிகளையும் கைவிட்டேன். ஆனால் எனக்கு பிடித்த பீட்சாவை மட்டும் கைவிடவில்லை. ஒரே மாதிரியான உணவாக இருக்குமே என நினைத்து புதிய புதிய வகை பீட்சாக்களை உட்கொள்ள துவங்கினேன். என்னுடைய முக்கிய நோக்கமே நமக்கு பிடித்த உணவை கைவிடாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது தான்” என அவர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தை சார்ந்த மெர்சருக்கு தனிப்பட்ட முறையில் பீட்சாவை சாப்பிடும் முறையின் மூலம் உடல் எடையை குறைக்கும் முறை பலனைத் தரலாம். ஆனால் அனைவருக்கும் இது பலன் தருமா என்றால் கேள்விக்குறிதான்.
– யாழன்







