ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான சூழல் உருவாகி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அமெரிக்காவுடன் மிகவும் இணக்கமாகப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் 9-வது மாதமாகத் தொடர்ந்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் டிரம்ப் இதனைத் தெரிவித்தார். அப்போது, “இந்த மோதல் முடிவுக்கு வருவதற்கான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறோம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஈரான் எங்களுடன் மிகவும் இணக்கமாகப் பேசி வருகிறது” என்று அவர் கூறினார்.

ஈரானின் ராணுவ வலிமை முடிவுக்கு வந்துவிட்டது!

ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட டிரம்ப், ராணுவ ரீதியாக ஈரான் ஏறக்குறைய முடங்கிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்றும் அவர் மீண்டும் எச்சரித்தார்.

அதேநேரத்தில், தற்போதைய சூழலில் ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், சூழ்நிலைகள் மாறினால் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை. “அமெரிக்கா முழு தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை தொடரும்?

ஈரானுக்கு எதிரான தற்போதைய கடற்படை முற்றுகையைத் தொடர்வதையே கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் விரும்புவதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் தரைவழியாக மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட ‘ஆபரேஷன் அயர்ன் கேட்’ (Operation Iron Gate) நடவடிக்கையும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்!

ஈரானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டவே டிரம்ப் விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பளிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கத்தார் பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கமறிந்த தூதர் ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தையை ஈரான் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கத்தார் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் இரண்டு நாள் காலக்கெடு கொண்ட ஒரு முன்மொழிவை அளித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய கப்பல் போக்குவரத்துப் பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முன்மொழிவை அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுவதை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். கற்பனையான பேச்சுவார்த்தைகள் குறித்து போலியான செய்திகளைப் பரப்புவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து, பல்வேறு துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நேற்று (நவம்பர் 10 )செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேல் குறைந்து ஒரு பேரல் 85.8 டாலராகச் சரிந்தது. முந்தைய வர்த்தக நாளிலும் 4 சதவீதத்திற்கும் மேல் விலை குறைந்திருந்தது.

அதேபோல், பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலையும் ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிந்து ஒரு பேரல் 91.56 டாலராகக் குறைந்தது. இது கடந்த 10 வாரங்களில் பதிவான குறைந்த விலை நிலைகளுக்கு அருகில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உண்மையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா, போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.