மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிக்குள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான, சம்பவம் குறித்து விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் மாணவர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டனர் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைப் பார்த்த நீதிபதிகள், வீடியோ ஆதாரங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணையை மேம்படுத்த வேண்டும்.
தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தற்போது எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை பள்ளிகளில் பொருத்த வேண்டியுள்ளது, அனைத்து பள்ளிகளிலும் கேமராக்கள் பொருத்துவதற்கு ஆகும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்பது குறித்து விரிவான விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.




