அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்றுள்ளதாக, தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மேலும், ஈரான் மீதான இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியது.

இந்தத் தாக்குதல்களால், ஐக்கிய அரபு அமீரகம், இராக் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இந்த நிலையில், மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பயங்கர வெடிப்புகளின் சத்தம் எழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவத் தளம் அமைந்துள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.