போலி சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகக் கூறி, ரவீந்திரநாத் ஐ.பி.எஸ். 4வது முறையாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் ரவீந்திரநாத். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 1989ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவைச் சேர்ந்தவர் ஆவார். கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குனரக டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ரவீந்திரநாத் அண்மையில் கர்நாடக மாநில போலீஸ் பயிற்சிப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அமலாக்க இயக்குனரக புதிய டி.ஜி.பி.யாக அருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த பணியிட மாற்றத்தால் ரவீந்திரநாத் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளார்.
இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்ற ரவீந்திரநாத், டி.ஜி.பி. பிரவீன் சூட்டை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, என்னை பணியிட மாற்றம் செய்து சிலர் பழிவாங்கிவிட்டதாகக் கூறியதுடன், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
