IPL2026 | பெங்களூருவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி!

லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்தது. லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பந்து வீச்சும் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. பெங்களூரு அணிக்கு டி.எல்.எஸ். விதிகளின்படி 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான பெத்தேல் (4), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினர். எனினும், 19 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களே எடுத்தது. இதனால், லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.