ஐபிஎல் தொடரில் லக்னோவில் நேற்று (மே 23) நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். இதனால் கேப்டன் பொறுப்பு ஜிதேஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஷெப்பர்டு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் – விராட் கோலி களம் கண்டனர். இதில், விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து களம்புகுந்த மயங்க் அகர்வால் 11 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, பில் சால்ட் 62 ரன்களில் அவுட்டானார்.
இவர்களையடுத்து, களமிறங்கிய ரஜத் படிதார் 18 ரன்களிலும், ஷெப்பர்டு ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். ஜிதேஷ் சர்மா 24 ரன்களிலும், டிம் டேவிட் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் பெங்களூரு அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.








