குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் பெற்றோரிடம் விசாரணை; மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் என தாயார் மீண்டும் புகார்!

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் முதற்கட்டமாக பெற்றோரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. குழந்தை கையை இழந்ததற்கு மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் என பெற்றோர் மீண்டும் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர்,…

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் முதற்கட்டமாக பெற்றோரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. குழந்தை கையை இழந்ததற்கு மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் என பெற்றோர் மீண்டும் புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. இது குறித்து செவிலியர்களிடம் தஸ்தகீர் தெரிவித்த போது, எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து கை மேலும் அழுகிய நிலையில், மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மருத்துவர்கள் இல்லாததாலும், அலட்சியத்தாலும் தான் தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், தவறு ஏற்பட்டு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. வளர்ச்சி குறைவான குழந்தை என்பதாலும், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாலும் அதற்கான சிகிச்சைகளும் எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குழந்தையின் பாதிக்கப்பட்ட கை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். இதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர் பிறக்கும் போது பல்வேறு குறையுடன் பிறந்துள்ளது. பிறக்கும்போது குழந்தை 32 வாரங்களில் பிறந்தது, மூன்று மாதத்தில் தலையின் சுற்றளவு பெரிதானதோடு, நீர் வந்ததால்தான் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

தலையில் ரத்தம் செல்லக்கூடிய சர்குலேஷன் அடைப்பு ஏற்பட்டது குறித்து தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கான சிகிச்சையானது நடை பெற்றது. ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால் கை தளர்ச்சி ஏற்பட்டு இரத்த உறைதல் ஏற்பட்டது.
பெற்றோர் கேட்டுக் கொண்டால், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் தயார்”” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. முதற்கட்டமாக குழந்தையின் பெற்றோரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையார் அஜிஜா கூறியதாவது:

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு விசாரணை என்று அழைத்தனர் விசாரணை நல்லபடியாக முடிந்தது. எந்த தேதியில் எதனால் இந்த பிரச்னை ஆரம்பித்தது என்று கேட்டார்கள் நாங்களும் பதில் அளித்தோம். எழுத்துப்பூர்வமான கேள்வியாக தான் இருந்தது. குழந்தைக்கு என்னென்ன பிரச்சினைகள்  இருந்தது என்று கேட்டார்கள்.

29-ம் தேதி ஊசி போட்ட பின் தான் பிரச்சனை. அன்றே செவிலியரிடம் நான் சொன்னேன். வலது கை விரலில் இருந்து மணிகட்டு வரை கருஞ் சிவப்பாக மாறி இருந்தது அதை தொடர்ந்து நான் வலியுறுத்திய பின் தான் அதை எடுத்தார்கள். மருத்துவர் மற்றும் செவிலியர் அலட்சியத்தால் தான் என் மகன் வலது கையை இழந்திருக்கிறான். நான் சொன்ன போது எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இனி யாரும் இந்த தவறை மறந்து கூட செய்யக்கூடாது.

விசாரணை திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். மூன்று பக்கங்கள் 21 கேள்விகள் இருந்தது. அனைவரையும் விசாரித்து விட்டு பதில் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர். என் மகனுக்கு நடந்த அநீதி போல் யாருக்கும் நடக்கக்கூடாது . என் மகனுக்கு தமிழக அரசு பதில் சொல்லி ஆக வேண்டும் அது வரை நான் போராட்டத்தை தொடருவேன். எந்த தாயிடமும் குழந்தை குறையாக பிறந்தது என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது. அமைச்சர் பலமுறை குறைமாத குழந்தை குறை உடைய குழந்தை என்று தெரிவித்தார்.

அமைச்சர் வரும்போது மட்டும் தான் அனைவரும் உடன் இருந்தார்கள். அதன் பின் யாரும் இல்லை. நான் மட்டும்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட எங்களை வைத்து பேசவில்லை. குழந்தையின் தலை 61 சென்டி மீட்டர் இருந்தது என்று அமைச்சர் சொன்னார். தலை சுற்றளவு 53 செண்டி மீட்டர் தான் உள்ளது. இன்று காலை தான் நான் அளந்து பார்த்தேன். 26 ஆம் தேதி இரண்டு கையுடன் நல்ல நிலையில் தான் என் மகனை கொண்டு வந்தேன். இன்று என் மகனை ஒற்றைக் கையுடன் பார்க்கிறேன். இவ்வாறு குழந்தையின் தாயார் அஜிஜா பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.