சனாதன தர்மம் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா?: ஆளுநருக்கு ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி!

சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி…

சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறந்தது என வலியுறுத்தி வருவதாக கூறி, சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக ஆளுனர் மாளிகை அலுவலகம், வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகள் தகவல் உரிமை சட்டத்தில் வராது என்றும், அதுதொடர்பாக தகவல்கள் தங்கள் செயலகத்தில் இல்லை என்றும் விளக்கம் அளித்த்திருந்தது. இந்த பதிலை எதிர்த்து ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, வழக்கறிஞர் துரைசாமியின் மேல்முறையீட்டு மனு மீது 8 வாரங்களில் முடிவெடுக்க ஆளுநர் மாளிகையின் பொது தகவல் மேல்முறையீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று வழக்கை முடித்துவைத்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சனாதன தர்மம் குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். சனாதன தர்மம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என ஆளுநர் பேசியுள்ளதால் சனாதன தர்மத்தைப் பற்றிய முழுத் தகவல் ஆளுநரிடம் உள்ளது. சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகமும், ஆதி திராவிடர் சமூகமும் சம அந்தஸ்தில் உள்ளனரா? பார்த்தசாரதி கோயில் அர்ச்சகர்கள் சிலரை, சென்னை மாநகராட்சி கழிவறைகளில் துப்புரவு பணியாளர்களாக இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவீர்களா? இந்த கேள்விகளுக்கு கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிலளிக்குமாறு மூத்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.