உலகில் மீண்டும் போர் பதற்றம்! காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல்!

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.  இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை தங்களுக்குச்…

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. 

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை தங்களுக்குச் சொந்தமானது என்று இஸ்ரேல் கூறும் நிலையில், மறுபுறம் பாலஸ்தீனும் இது தங்களுடையது என உரிமை கோருகிறது.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இதற்கிடையே இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் அமைப்பினர்  நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் திடீர் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. அவர்கள் இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்ததாகவும், 20 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது.

இது மட்டுமின்றி ஆயுதமேந்திய ஹமாஸ் படைகள் பல இடங்களில் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவி உள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து பல மணி நேரம் நீட்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்குப் பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதில் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, பதிலடி கொடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இஸ்ரேலின் ஜெருசலேமில் சைரன்கள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தாங்கள் போருக்கு ரெடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த இறுதி தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளது ஆரம்பக்கட்ட தகவல்களில் தெரிகிறது. இது மட்டுமின்றி இஸ்ரேலிய எல்லைக்குள் ஹமாஸ் படையினர் ஊடுருவி உள்ளதாக இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளனர். மேலும், அவர்கள் கார்கள் மற்றும் வீடுகள் என்று கண்ணில் படும் அனைத்தையும் நோக்கி தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News 7 tamil – ன் WhatsApp – ல் இணைய!

https://whatsapp.com/channel/0029Va6Hv3M4tRrwjJ2hPo0O

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.