சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. மேலும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
இதையடுத்து, சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் 2009ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம், அமலுக்கு வருவதற்கு முன்பாகவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, மறு உத்தரவு வரும் வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.