குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா கடை உரிமையாளர்கள்,…

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா கடை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்து, தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 7 பேருக்கு எதிராக வழக்கை நடத்த மட்டுமே மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதேநேரம், இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும், நீதிபதி ஏற்க மறுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.