அரசுப பள்ளிகளில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் 2800 மாணவ மாணவிகளுக்கு 4 கோடியே 90 லட்சம் மதிப்பில் சைக்கிள்களை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
அணமைச் செய்தி: ‘‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்’ – அமைச்சர் மெய்யநாதன்’
அப்போது விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, தற்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்தும் விலை இல்லாமல் கிடக்கிறது எனத் தெரிவித்த அவர், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, தமிழ்நாடு முதலமைச்சர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களுக்கு வேண்டுமானால் இது விலையில்லா சைக்கிளாக இருக்கலாம். ஆனால், அரசு இதனை விலை கொடுத்து வாங்கியுள்ளது. இதை உணர்ந்து மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.








