இலவசங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தற்போது வந்தாலும் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் 2800 மாணவ மாணவிகளுக்கு 4 கோடியே 90 லட்சம் மதிப்பில் சைக்கிள்களை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது விழாவில், பேசிய அமைச்சர் மெய்ய நாதன் நெகிழிப் பைகளை ஒழிப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கடும் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது வழங்கப்படுகின்ற சைக்கிள்களில் நெகிழிகள் சுட்டப்பட்டு இருந்தது. அவற்றை நான் சொன்ன பிறகு ஆசிரியர்கள் அகற்றினார் இதுபோன்று இல்லாமல், முன்கூட்டியே செயல்பட வேண்டும் எனக் கூறினார். மேலும், இலவசங்கள் குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது எனத் தெரிவித்த அவர்,
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். இதையே தான் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் கூறியுள்ளனர். அவர்கள் வழி ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறினார். மேலும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இலவச சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.