புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீஸசரில் சதுரங்க காய்களுக்கு பதிலாக கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த டீஸர் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 10ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. அதிலும் கூடுதல் சிறப்பாக நமது தமிழகத்தில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கதில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஒரு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீஸர் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
https://twitter.com/CMOTamilnadu/status/1552284683081490432?t=apAgo_p8NskEmfwmwd_d2w&s=08
சதுரங்க விளையாட்டில் வரும் பகடைகாய்கள் ராஜா, ராணி, பகடைகாய்களுக்கு நமது மண்ணின் மணம் வீசும் மாதிரியான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சதுரங்க விளையாட்டில் மொத்தம் 6 பகடைகாய்கள் உள்ளன. இந்த வீடியோவில் பண்டைய காலத்து போர்முறைகளை நினைவுகூரும் விதமாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சதுரங்கம் வெறும் விளையாட்டல. பண்டைய காலத்து போர்முறையில் பெண்களுக்கும் பங்குண்டு என்பதை பறைசாற்றும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிப்பாய் முதல் ராணி வரை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிப்பாய் காய்களை எடுத்துக்கூறும் விதமாக மல்யுத்த வீரர்கள் போர்புரியும் காட்சி, சில சிப்பாய்கள் சிலம்பு வைத்து மோதி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், நைட் காய்க்கு பதிலாக குதிரையாட்டத்தையும், ராணிகள் வாள் வைத்து போர்புரிவது போன்றும், பகைவரை லாவகமாக காய்களை நகர்த்தி அடிபணிய வைப்பது போன்ற காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், கலைஞர்கள் நம்மை மாயாஜால உலகிற்கு அழைத்து சென்றுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.







