போட்டியை சமாளிக்க மூத்த பணியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றன. அதிகரிக்கும் போட்டி, குறித்த காலத்தில் பணியை முடித்தல், தரமான செயல்பாடுகள் போன்றவை முக்கியமான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை இளையவர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்றும், செலவினம் குறையும். என்றும் செயல்பட்டன நிறுவனங்கள். இப்போது திடீரென அனுபவமுள்ள மூத்த பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளன.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் காலாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்கு காரணம் பணியாளர்களின் சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளின் செலவும் அதிகரித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. நிறுவனங்களின் வருவாய் குறைந்ததற்கு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் மட்டும் காரணம் இல்லை, பணியாளர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
2021 -22ஆம் நிதியாண்டில் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்திற்காக 3 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. இது மொத்த வருவாயில் 62 சதவீதமாகும். குறிப்பாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் சம்பளத்திற்காக மட்டும் மொத்த வருவாயில் 55 சதவீதம் வரை செலவு செய்கின்றன. இதேபோல் நடுத்தர சேவை நிறுவனங்களான எல் அண்ட் டி இன்போடெக் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகியவை 60 சதவீதம் வரை சம்பளத்திற்காகச் செலவழிக்கின்றன.
இந்திய தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தில் அதிகப்படியான தொகையைச் செலவு செய்ய முக்கியமான காரணம், பணியாளர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி வேறு நிறுவனத்திற்கு மாறும் அட்ரீசியன் விகிதமானது, முன்பை விட அதிகமாக உள்ளது. மேலும், பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் விகிதம் மிகவும் அதிகரிப்பதால், வர்த்தக செயல்பாட்டில் தொய்வு இல்லாமல் நடக்க அதிகப்படியான பணியாளர்களை பணியில் அமர்த்துகின்றன.
இந்தியாவில் முன்னணியில் உள்ள 6 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் மொத்தம் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றினர். கடந்த ஒரு ஆண்டில் தகவல் தொழில் நுட்ப நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பணியாளர்களுக்கான சம்பள செலவினம் 67 ஆயிரத்து 301 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 50 ஆயிரத்து 796 கோடி ரூபாயாக இருந்தது. சம்பளத்திற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை ஒரு வருடத்தில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனப் பணியாளர்களின் ஆண்டு சராசரி சம்பளம் 4 லட்சத்து 55 ஆயிரத்தில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் புதிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு சம்பளமே காரணம் எனவும் சொல்கின்றனர் நிபுணர்கள். ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி அதிகரிக்கும் சூழலில் குறைவான சம்பளம் பொருளாதார சுழலில் சிக்க வைக்கும் ஆபத்தும் உள்ளது என அஞ்சுகின்றனர் பணியாளர்கள். இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் தகவல் தொழில் நுட்பத் துறையில் அனுபவமிக்க பணியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதே. இது நீடிக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
– ரா.தங்கபாண்டியன்








