மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, குக்கி மற்றும் மேய்தி என்ற இரு சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, பல்வேறு தீ வைப்பு சம்பவங்களும், நடைபெற்று அது கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த இனக்கலவரத்தில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு கடந்த மூன்று நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்ட அமித் ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தது பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை கடந்த மூன்று நாட்களாக ஆய்வு செய்து, அது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடாத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட குக்கி மற்றும் மேய்தி இனத்தின் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினேன். அத்துடன் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரத்தில் உயிர் இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை நிச்சயம் தப்ப விடமாட்டோம். இந்த இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பான 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் சிபிஐ விசாரிக்கும். இந்த விசாரணை நிச்சயம் நேர்மையான, நியாயமான விசாரணையாக இருக்கும் என்று மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்.
சிஆர்பிஎஃப் ஓய்வுபெற்ற டிஜி குல்தீப் சிங்கின் கீழ் வியாழன் முதல் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த கமாண்ட் செயல்படத் தொடங்கும். இந்த குழு நிலைமையை நிர்வகிக்க மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல்வேறு படைப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணம் வழங்கப்படும். ரேசன் பொருட்கள் வழங்க சிறப்பு முகாம்கள் அமைப்போம். பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்வர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். இதில் 5 ரூபாய் லட்சம் மாநில பங்களிப்பாகவும், மீதமுள்ள 5 லட்சம் ரூபாய் மத்திய பங்களிப்பாகவும் இருக்கும். எதிர்காலத்தில் மணிப்பூரில் இதுபோன்ற வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.