சீமான் மற்றும் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி அவர்கள் ட்விட்டரில் பதிவிடுவதாக மத்திய அரசு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவர்களது கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ”அடிமை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளுங்கள்” – தயாரிப்பு நிறுவனத்திற்கு ’EXO’ உறுப்பினர்கள் நோட்டீஸ்!!
இந்நிலையில், சீமான் மற்றும் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
“நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.







