கைதியின் பற்களை பிடுங்கிய விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் விசாரணை!

கைதியின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் நேரில் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட…

கைதியின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் நேரில் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய காவல்துறை ஏஎஸ்பி பல்வீர் சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதேபோல் மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தை கண்டித்தும் காவல் அதிகாரி பல்வீர் சிங்கை கைது செய்ய கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்கள் : காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

இதனையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல், நெல்லை மாவட்ட  எஸ்.பி யாக இருந்த சரவணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பல்வீர்சிங்கிடம் மனித உரிமைகள் ஆணையம் அடுத்த வாரம் நேரில் விசாரணை நடத்த உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ள மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணையத்தின் எஸ்பி தலைமையில் பல்வீர் சிங்கிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.