மாஹாராஸ்ட்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. காந்தி இறப்பு குறித்த கருத்தை வெளியிட்ட ராகுல் காந்தியின் மீது, ராகுல் குண்டே என்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையானது வெகு நாட்களாக முடங்கியிருந்தது. அந்த வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மாஹாராஸ்ட்டிர மாநிலம் பிவண்டியில் தேர்தல் பேரணியில் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் காந்தி “காந்தியைக் கொன்றது ஆர்எஸ்எஸ்தான், ”. என்ற கருத்தை கூறியிருந்தார்.ராகுல் காந்தி முன் வைத்த இந்த கருத்திற்காக ஆர்எஸ்எஸை சேர்ந்த ராகுல் குண்டே என்பவர் கடந்த 2016ம் ஆண்டு அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க ,முன்னரே நீதிமன்றத்தில் பிணை வாங்கியிருந்தார்.கடந்த 2018ம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி “தான் எந்த தவறும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராகுல் காந்தி பொது மன்னிப்பு கேட்டால் அந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று ராகுல் குண்டே சொன்னபோது “ நான் இந்த கருத்திலிருந்து மாறப்போவதில்லை. இந்த வழக்கை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள் காட்டிய ஜீடிசியல் மாஜிஸ்திரேட் “ஜே.வி. பாலிவால்” ராகுல் காந்தியின் மீதான வழக்கு இந்த பிரிவின் கீழ்தான் வரும். எனவே அந்த வழக்கைப் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினசரி விசாரணை அடிப்படையில் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.