உடல் பருமனாக இருப்பது, தோற்றத்தைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. உடல் பருமன் ஒரு ஆபத்தான நோயும் கூட என சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர். இரா.செந்தில் முகநூலில் தெரிவித்துள்ளார்.
உடல் பருமன் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நேற்றைய தினம் என்னுடைய கிளினிக்குக்கு 14 வயதுடைய ஒரு சிறுவனைக் கூட்டி வந்திருந்தார்கள். பெற்றோருடைய கவலை அவனுடைய ஆண்குறி சிறியதாக இருக்கிறது என்பதுதான். நான் அவனைப் பரிசோதித்தேன். அந்த 14 வயது சிறுவனுடைய எடை 67 கிலோ கிராம். அவனுடைய சிக்கல் ஆண்குறியுடைய அளவு அல்ல. அவனுடைய உடலின் பருமனால் ஆண்குறி சிறியதாகத் தெரிவது தான். ‘இப்படிப்பட்ட சிறுவனை நான் பார்ப்பது இது முதல் தடவை அல்ல’.
உடல் பருமனாக இருப்பது தோற்றத்தைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. உடல் பருமன் ஒரு ஆபத்தான நோயும் கூட. ஒரு காலத்தில் உடல் பருமன் வசதியானவர்களின் நோயாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் அது ஏழைகளின் நோயாக மாறி இருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் வேளாண்மைப் புரட்சியின் காரணமாக தானியங்களின் உற்பத்தி அதிகரித்து தானியங்கள் தாராளமாகக் கிடைப்பது தான். தானியங்களின் விலை குறைவாக இருக்கிறது. ஆகவே மனிதர்கள் மாவுச்சத்து உணவுகளை அதிகம் உண்ணுகிறார்கள்.
அரிசி, கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற எல்லா தானியங்களிலும் மாவுச்சத்து அதிகம். புரதச்சத்து, கொழுப்பு ஆகியவை அதிகமுள்ள உணவுகள் விலை அதிகமாக இருக்கின்றது. ஆகவே உடல் பருமன் ஏழைகளின் நோயாக மாறிவிட்டது. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதய நோய், மூட்டுத் தேய்மானம், மூச்சுக் குழாய் தொடர்பான நோய்கள் ஆகியவை மட்டுமல்லாமல் சில புற்றுநோய்களும் கூட உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிகம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
உடல் பருமனைக் குறைப்பதற்கான வழி என்ன என்று கேட்கும் போது பெரும்பாலானோர் உடற்பயிற்சியைத் தான் சொல்லுகிறார்கள். அது உண்மை அல்ல. உடல் பருமனை குறைப்பதற்கு முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவை கட்டுப்படுத்துவதுதான்.
அண்மைச் செய்தி: பிப்ரவரி 1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி தகவல்
இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு கூறுகிறேன். ஒரு டீஸ்பூன் சர்க்கரை என்பது ஏறத்தாழ 10 கிராம். ஒரு நாளைக்கு 4 முறை சர்க்கரையோடு காபி அல்லது டீ குடிப்பதாக வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு 40 கிராம் சர்க்கரை சாப்பிடுகிறீர்கள். இது 160 கலோரி ஆகும். இந்த 160 கலோரீகளைச் செலவழிக்க வேண்டும் ஆனால் 53 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவேண்டும் அல்லது 22 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்ட வேண்டும் அல்லது 20 நிமிடங்கள் நீச்சல் அடிக்க வேண்டும். 4 ஸ்பூன் சர்க்கரையை சாப்பிடுவதை விடுவதுதான் எளிதானது. சர்க்கரையை மட்டுமல்ல, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் இவை எவற்றையும் பயன்படுத்தவே கூடாது.
அது கம்பு, கேழ்வரகு, தினை, சாமை போன்ற சிறு தானியங்களாக இருந்தாலும் சரி, அரிசி, கோதுமை, சோளம் போன்ற பெரு தானியங்களாக இருந்தாலும் சரி இவை எல்லாமே மாவுச்சத்து கொண்டவைகள் தான். இவற்றை மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். முட்டை, தயிர், வெண்ணெய், நெய் போன்ற கொழுப்புகளைப் பயன்படுத்துவதைவிட கார்போ ஹைட்ரேட் எனச் சொல்லப்படும் மாவுச்சத்துக்களைப் பயன்படுத்துவதால்தான் உடல் எடை அதிகரிக்கிறது என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
கண்டிப்பாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளின் நோக்கம் மூட்டுகளை இலகுவாக வைத்திருப்பதும் உடலை வலிமையாக வைத்திருப்பதும் தான். உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மட்டும் தான் ஒரே வழி.
எவ்வளவு எடை இருக்க வேண்டும், தெரியுமா?
ஒரு வயது குழந்தையின் அதிகபட்ச எடை 10 கிலோ கிராம். ஐந்து வயது குழந்தையின் அதிகபட்ச எடை பதினேழு கிலோ கிராம். பத்திலிருந்து இருபது வயது வரை உள்ள குழந்தைகள் அவருடைய உயரம் 100 சென்டி மீட்டருக்கு மேல் எவ்வளவு சென்டிமீட்டர் இருக்கிறதோ அதைவிட 10 கிலோ கிராம் குறைவாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 14 வயது குழந்தையின் உயரம் 140 சென்டிமீட்டர் என்றால் அந்தக் குழந்தை 40 சென்டி மீட்டரில் இருந்து பத்தை கழித்துவிட்டு 30 கிலோ கிராம் இருக்க வேண்டும்.
20 வயதுக்கு மேற்பட்டவர்களின் எடையைப் பொறுத்தவரை அவருடைய உயரம் 100 சென்டி மீட்டருக்கு மேல் எவ்வளவு இருக்கிறதோ அதிலிருந்து இரண்டு குறைத்து அந்த எண்ணிக்கையில் எடை இருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக ஒரு வளர்ந்த ஆணுடைய உயரம் 170 சென்டி மீட்டர்கள் என்றால் நூற்றுக்கு மேல் அவருடைய உயரம் 70 சென்டிமீட்டர்கள். அதில் இரண்டைக் கழித்து 68 கிலோ கிராம் இருந்தால் நல்லது.
உடல் பருமன் ஒருவருடைய தோற்றத்தை மாற்றுகிறது. சிறுவயதிலேயே மூட்டுத் தேய்மானம் ஏற்படவும், மூட்டு வலி உண்டாகவும் காரணமாக இருக்கிறது. மூச்சுத்திணறல், இருதய நோய், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகிய பல்வேறு நோய்களுக்கு ஊற்றாக இருக்கிறது. ஆகவே, சரியான எடையை பேணுவது இன்றியமையாதது”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








