தமிழ்நாட்டை நோக்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த இரு ஆண்டுகளாக  அரசு எடுத்த முயற்சிகளால் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு மற்றும் இந்திய நிதி நிறுவனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த அதி நவீன வங்கி மற்றும்…

கடந்த இரு ஆண்டுகளாக  அரசு எடுத்த முயற்சிகளால் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு மற்றும் இந்திய நிதி நிறுவனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த அதி நவீன வங்கி மற்றும் காப்பீடு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. நகரின் மையப் பகுதியில் 56 ஏக்கர் நிலப்பரப்பளவில் வணிக, குடியிருப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.116 கோடி மதிப்பீட்டில் நிதி நுட்ப நகரம் அமைகிறது. உலகத்தரம் வாய்ந்த நிதிநுட்ப கோபுரம் ரூ.254 கோடி திட்ட மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.
இதன் அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இரு ஆண்டுகளாக அரசு எடுத்த முன்னெடுப்புகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து இருக்கிறது. தொழிற்துறை மிக வேகமாக முன்னேற்றங்களை உருவாக்கி வருகிறது. திராவிட மாடல் ஆட்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொழிற்துறை நிகழ்ச்சிகள் –  சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகச்சிகள்.
தமிழ்நாட்டில் படித்த திறன்மிக்க இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி தொழில் தொடங்க வருகின்றன. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நிதி நுட்ப நகரம் மூலம் சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
நிதி நுட்ப நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மதுரை, திருச்சியிலும் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும். நிதி நுட்ப நகரங்களில் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை மாற்றுவது அரசின் இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.