அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகழ்ப்பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் நூற்றாண்டு புகழ்ப்பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“மேடைகளில் சொற்பொழிவுகள் செய்வதுதான் வழக்கம். ஆனால் இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு புதிய சிந்தனையுடன் மேடையில் 4 கவிஞர்கள் பாடலை உருவாக்க அதற்கு அவர் இசை அமைத்தார். இது கருணாநிதியின் புகழ் பாடும் பாடல் மட்டுமல்ல, இளைஞர்களுக்கான பாடல். திருவாரூர் குளத்தின் பெயர் கமலாலயம். அந்த குளத்தில் முன்னோக்கி நீந்தி கரையை எட்டியவர் கருணாநிதி. குளத்தை மட்டுமல்ல, களத்தையும்.
நடிகர் விஜய் பேசியது குறித்து முழு விவரங்களையும் அறியாமல் சொல்வது ஏற்றதாக இருக்காது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது.
எந்த மாநிலத்திற்கு ஒருவர் ஆளுநராக வருகிறாரோ அந்த மக்களின் மனதோடு கலந்தவராக அவர் திகழ வேண்டும்.
செந்தில் பாலாஜியை அதிகாரப்படி கைது செய்திருக்கிறார்கள். அவரை கைது செய்த முறை சரியா? அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைக்கிறார்கள் என அர்த்தம்”
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.







