விராட் கோலிக்கு காயம்? மேலும் முக்கிய விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி சமீப காலமாக மோசமான பார்மில் தொடர்ந்து வருவதை அடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் அவரது பார்மை, அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், காயம் காரணமாக  அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா; பிரதமர் மோடி பங்கேற்பு?

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டிகளை துவங்கி வைக்க தமிழ்நாடு அரசு, உலக சதுரங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி துவக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன.

ஏற்கனவே கடந்த மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் இருந்து துவங்கி வைக்கப்பட்ட ஒலிம்பியாட் ஜோதியானது, இந்தியாவின் 75 நகரங்களுக்கு பயணித்து, வரும் 27 ஆம் தேதி சென்னை வந்தடைகிறது. ஜூலை 27 ஆம் தேதி ஒலிம்பியாட் ஜோதி சென்னை வந்தடைந்த பின்னர் ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட துவக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் ஜூலை 29 மதியம் 3 மணியளவில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் போட்டியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் – ஶ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர ஶ்ரீகாந்த், இந்தியாவின் சக வீரரான மிதுன் மஞ்சுநாத்திடம் தோல்வியடைந்தார். முதல் சுற்றில் களம் கண்ட ஶ்ரீகாந்த் 2-1 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் மிதுன் மஞ்சுநாத்.

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்தியாவின் HS பிரணாய், தாய்லாந்து நாட்டை சேர்ந்த சித்திக்கோம் தம்மசின் உடன் விளையாடி 21-13, 21-16 என எளிதில் கைப்பற்றினார். 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்திய இளம் பேட்மிண்டன் நட்சத்திரம் எச்.எஸ். பிரணாய்.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சக இந்திய வீராங்கனையான மல்விகா பன்சோத் உடன் மோதி, முதல் இரண்டு செட்டுகளையும் 21-18, 21-14 என கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கடந்த 3 தொடர்களாக தகுதி சுற்றுகளில் வெளியேறி வரும் சாய்னா நேவால், இந்த தொடரில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், நாளை மதியம் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியை வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் இருப்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணி மீது வழக்கு தொடுப்பேன்- மஹிந்திரா நிறுவனர் ஜாலி டுவீட்

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதலாவது போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளதாகவும், தான் டிவியை ஆன் செய்வதற்குள் போட்டி நிறைவுற்றதற்காக இந்திய அணியின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் நகைச்சுவையாக டுவீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் யு17 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர்

இந்த வருடம் அக்டோபர் மாதம் 11 முதல் 30 ஆம் தேதி வரை, இந்தியாவில் கோவா, புவனேஸ்வர், நவி மும்பை உள்ளிட்ட இடங்களில் U 17 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான முழு உதவிகளையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு சார்பில் விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து கொடுக்கும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய கால்பந்து கழகத்தின் பொதுச்செயலாளர் தார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக கோ கோ லீக் தொடர்

வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி புனேவில் துவங்குகிறது இந்தியாவின் முதல் கோ கோ லீக் போட்டி. ஐபிஎல் போட்டிகள் போன்று, கோ கோ விளையாட்டிற்கென தனித்தனியாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளாக நடத்தப்பட உள்ளன. 6 அணிகள் பங்கேற்கும் இந்த கோ கோ லீக் தொடர், உள் அரங்கம் மற்றும் வெளி மைதானங்களில் நடத்த அகில இந்தியா கோ கோ கழகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.