மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு ராகுல் கண்டனம்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் கடன் அளவு, வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள…

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் கடன் அளவு, வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்த புள்ளிவிவரங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது இருந்த நிலையையும் தற்போதைய நிலையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014ல் 56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நாட்டின் கடன் தற்போது 139 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்குமான கடன் 2014ல் ரூ. 44,348 ஆக இருந்ததாகவும், அது தற்போது ரூ.1,01,048 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், 2014ல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 4.7 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது 7.8 ஆக உயர்ந்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

எல்பிஜி சிலிண்டர் விலை 2014ல் ரூ.410 ஆக இருந்தது என்றும் அது தற்போது ரூ.1,053 ஆக உயர்ந்துள்ளது என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 2014ல் 59 ஆக இருந்தது என்றும் அது தற்போது 80 ஆக உள்ளது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி – இறக்குமதி இடையேயான வர்த்தக பற்றாக்குறை காங்கிரஸ் ஆட்சி முடியும்போது 135 பில்லியன் டாலராக இருந்ததாகவும், அது தற்போது 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஆட்சியாளர்களின் கர்வம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.