இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 43 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 1,26,86,049 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் 446 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,65,547 ஆக அதிகிரத்துள்ளது.
இந்நிலையில், ஒரே நாளில் நேற்று உச்சபட்சமாக 43 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 43,00,966 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 39,00,505 கொரோனா தடுப்பூசிகளின் முதல் தவணை வழங்கப்பட்டது. 4,00,461 தடுப்பூசிகளின் இரண்டாவது தவணை வழங்கப்பட்டது.
தற்போது நாட்டில் பெரும்பாலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் போல் தனியார் மருத்துவக் கிளினிக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.







