அரையிறுதியில் ஜோகோவிச்-மேலும் டாப் 10 விளையாட்டுச் செய்திகள்

வேகத்தின் விவேகம் ஜஸ்பிரித் பும்ரா இந்திய வேகப்பந்து வீச்சாளரும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியா…

வேகத்தின் விவேகம் ஜஸ்பிரித் பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளரும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம், அணிக்கு தேவையான பங்களிப்பு வழங்கும் வகையில் தனது வேகமான பந்துவீச்சில் இதுவரை 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்திய மண் தவிர்த்து, மற்ற நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட போதெல்லாம், இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு, இதுவரை குறிப்பிட்ட 4 நாடுகளில் மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 15 வருட கனவு கனவாகவே ஆனது

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது 2-2 என சமனில் முடிந்தது. இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ இந்த போட்டியில் ஆட்ட நாயகனாகவும், தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்காக இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக ஜஸ்பிரித் பும்ராவும் தொடர் நாயகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கோலியை விஞ்சியை ஜோ ரூட்

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, ஜோ ரூட் முன்னிலை வகிக்கிறார். தற்போது விளையாடி வரும் வீரர்களில், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களில் நேற்று வரை இந்திய வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் 27 சதத்துடன் சமனில் இருந்து வந்தனர். இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஜோ ரூட் சதம் விலாசியதை அடுத்து அவர் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் விராத் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பினுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இங்கிலாந்து அணி சாதனை

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை புரிந்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து 269 ரன்கள் சேர்த்து, இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்கள் இமாலய இலக்கை எட்டி அபார வெற்றிக்கு வழி வகுத்தனர். இதன் மூலம், இதுவரை இங்கிலாந்து அணி சேஸ் செய்ததிலேயே, அதிக இலக்கு இதுவே என்ற சாதனையை படைத்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் கிரிக்கெட்

உலக அரங்கில் ஜொலித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் லெஜன்ட் கிரிக்கெட் லீக் தொடர் வரும் செப்ட்பர் 20 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறவுள்ளது. உலகின் முன்னணி மற்றும் முன்னோடி நட்சத்திரங்களான சச்சின், திராவிட், லாரா, வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் விளையாடும் இந்த கிரிக்கெட் லீக் இரண்டாவது வருடமாக சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 4 அணிகளாக பிரித்து விளையாடப்படும் இந்த லெஜன்ட் தொடர், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அடுத்த அத்தியாயம் துவங்கப்பட தயாராக உள்ளது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், இந்த ஆண்டு விரேந்திர ஷேவாக், இர்பான் பத்தான் யூசுப் பத்தான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியன் மாஸ்டர் பேட்மின்டன் ஓபன்; தொடர் தோல்வியில் இந்திய வீரர்கள்

கோலாலம்பூரில் நடைபெற்ற வரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை மாளவிகா முதல் சுற்றிலேயே தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார். மலேசியாவின் கோ ஜின் வெய் உடன் மோதிய மாளவிகா 10-21, 17-21 என தோல்வியுற்று, முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதே போல இந்திய இணையான டிரசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் இணை, மலேசியவின் தினா முரளிதரன் மற்றும் டான் பேர்லி இணையுடன் மோதி தோல்வியுற்று, முதல் சுற்றிலேயே இருவரும் வெளியேறினர்.

பீகாரில் வளரும் ஒலிம்பியாட் ஜோதி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் சென்றடைந்துள்ளது. நேற்று இந்தூரில் இருந்து போபால் கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி, இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்து, நாளை. பீகார் மாநிலம் செல்ல இருக்கிறது. பீகாரில் பாட்னா, ராஜ்கிர், கயா உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் ஜோதி, வரும் 28 ஆம் தேதி பிரம்மாண்ட வரவேற்புடன் சென்னை கொண்டு வரப்பட உள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா-மேட் பெவிக் ஜோடி

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு, காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் குரேஷிய வீரர் மேட் பெவிக் ஜோடி, கனடாவை சேர்ந்த கேபிரியல்லா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் இணையை சந்தித்தது. இதில் சானியா மிர்சா, மேட் பெவிக் இணை அதிரடியாக விளையாடி 6 -4, 3-6, 7-5 என விளையாடி 2-1 என்ற கணக்கில் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, அரயிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐந்தாவது முறையாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிமோனா ஹாலெப்

முன்னாள் சாம்பியனான சிமோனா ஹாலெப் 5 வது முறையாக விம்பிள்டன் தொடரில் காலிறுதிப் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் நான்காம் நிலை வீராங்கனையாக இருக்க கூடிய பவுலா படோசா வை 6-1, 6-2 என வீழ்த்தி 2-0 என நேர் செட்களில் அபாரமாக வீழ்தியதை அடுத்து, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிமோனா. காலிறுதி சுற்றில் உலகின் 20 ஆம் நிலை வீராங்கனையான ஆமாண்டா அணிசிமோவா வை எதிர்கொள்கிறார் சிமோனா.

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

உலகின் மூன்றாம் நிலை வீரரான நோவோக் ஜோகோவிச் விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை, 3-2 என வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். பரபரப்பான ஆட்டத்தில் 5-7, 2-6 என முதல் இரண்டு செட்களை கைவிட்டாலும், அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-2, 6-2 என கைப்பற்றி அரயிருதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.