2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் (SCA) மைதானத்தை நிரஞ்சன் ஷா மைதானம் என மறுபெயரிடும் நிகழ்ச்சி நேற்று (பிப். 14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கலந்துக்கொண்டார். இதையடுத்து, 2024 டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?
மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது..
“2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடரில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும். 2023 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லாவிட்டாலும் மக்களின் இதயங்களை இந்திய அணி வென்றது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் நிச்சயம் இந்தியா டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும். அந்த அணி ரோகித் தலைமையிலான அணியாக இருக்கும்” இவ்வாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பு வகிப்பார் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், ரோகித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வெல்லும் என ஜெய் ஷா பேசியிருப்பது, ரோகித்தின் கேப்டன்சி பொறுப்பை உறுதி செய்துள்ளது.








