திருப்பரங்குன்றம் விவகாரம் ; நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலை….!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளதை நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ் நாடு அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ”திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தடைவிதிக்கக் கோரும் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபமேற்ற அனுமதித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது எனத் திமுக அரசிற்கு சம்மட்டியடி கொடுத்து, தீபத்தூண் என்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நிலைநாட்டிய நீதிமன்ற அமர்வுக்கு எனது உளமார்ந்த நன்றிகள. தொடர்ந்து பலமுறை நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும் திருந்தாமல், திரும்பத் திரும்ப இந்து விரோத விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் திமுக அரசு தனது அராஜகக் கொட்டத்தாலேயே கோட்டையிலிருந்து துரத்தியடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது. திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.