சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருவதால், உபரி நீர் திறக்கப் பட்டது. இன்று காலை 11 மணியளவில் புழல் ஏரி திறக்கப்பட்டது. முதலில் 1500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் 2000 கன அடி உபரிநீரை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதே போல செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கன அடி நீர் இப்போது திறக்கப்பட்டுள்ளது.