அபராத தொகை அதிகரிப்பால் சென்னையில் விபத்தால் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பெருநகரங்களில் சென்னையும் ஒன்று. விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும் சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போக்குவரத்து அபராதத் தொகை பல மடங்கு தற்போது உயர்ந்துள்ளது.
தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் சரக்குகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட பயணிகளைவிட அதிகளவில் பயணிகளை ஏற்றுவது ஆகிய 8 விதிமுறை மீறல்கள் முக்கியமானவைகளாக கொண்டு சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் 180 சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது என்பதனை போக்குவரத்து போலீசார் கண்டறிந்து அங்கு மீண்டும் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு 18 லட்சத்து 69 ஆயிரத்து 316 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 39 கோடியே 84 லட்சத்து 44 ஆயிரத்து 147 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 10 லட்சத்து 92 ஆயிரத்து 192 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 21 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரத்து 600 ருபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு 21 லட்சத்து 02 ஆயிரத்து 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 கோடியே 82 லட்சத்து 03 ஆயிரத்து 481 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 10 லட்சத்து 23 ஆயிரத்து 626 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 20 கோடியே 06 லட்சத்து 81 ஆயிரத்து 620 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு 22 லட்சத்து 94 ஆயிரத்து 824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 68 கோடியே 18 லட்சத்து 96 ஆயிரத்து 512 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 10 லட்சத்து 56 ஆயிரத்து 412 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 28 கோடியே 97 லட்சத்து 46 ஆயிரத்து 750 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டை விட 2022ம் ஆண்டு 9.16 சதவீத வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 59.24 சதவீத அபராத தொகை கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. 3.20 சதவீத வழக்குகளில் கூடுதலாக தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 44.38 சதவீத அபராத தொகை கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 559 விபத்துகள் நடந்ததில் 575 பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு 566 விபத்துகளில் 573 பேர் உயிரிழந்தனர். 2022 ஆம் ஆண்டு நடந்த 499 வழக்குகளில் 507 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டைவிட 11.52 சதவீத உயிரிழப்புகளும், 11.84 சதவீத விபத்துகளும் குறைந்துள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறையின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.
விபத்துக்களை குறைத்தும், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வைத்தும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை இந்த ஆண்டு இன்னும் தீவிரமாகும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மோசமான சாலைகளால் சென்னையில் விபத்து மரணங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வாகன ஓட்டிகள் முன்வைக்கின்றனர்.







