விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஒரு பைலட் உள்ளிட்ட 5 விமான ஊழியர்கள் பறக்க தடை விதித்துள்ளதாக ஏர் இந்திய நிறுவனத்தின் சிஇஓ கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி சக பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக பாதிகப்பட்ட பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விமான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு பைலட் மற்றும் 4 விமான பணிப் பெண்கள் உள்ளிட்ட 5 பேர் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த 5 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பெல் வில்சன் கூறுகையில்.”நாங்கள் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் ஊழியர்களின் கவனமின்மையால் இந்த சம்பவம் நடந்ததா என்று விசாரித்து வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க விமான ஊழியர்களுக்கு பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் விமானத்தில் மதுபானங்கள் வழங்குவது குறித்த கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.