பட்டுக்கோட்டையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள், சாலையில் கிடந்த பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளைப் பிடுங்கி, அதிலிருந்த பொருட்களை கீழே கொட்டினார். தொடர்ந்து, காலணியை வைத்து பெண்ணை அடித்து விரட்டினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அந்த பெண்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள் : பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நியூஸ் 7 தமிழ், முக்கிய செய்தியாக வெளியிட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பழங்குடியின பெண்களை காலணியால் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
”தஞ்சாவூரில் சாலையில் கிடந்த பாட்டில்களை பழங்குடியினப் பெண்கள் எடுத்துக் கொண்டிருந்த போது குறிச்சி சீனிவாசன்புரம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் காலணியால் தாக்கியுள்ளார். பழங்குடியினப் பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உடனடியாக இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும்.
கடுமையான தண்டனைகள் வழங்கினால்தான் தொடர்ந்து இதுபோன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அச்சம் வரும். எனவே, சமூகநீதி ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்கவேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.










