தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து
12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சட்ட முன்வடிவின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், தொழில் துறை அமைச்சர் அவர்களும் விளக்கம் அளித்தார்.
இந்த சட்ட முன்வடிவிற்கு, அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளருக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவை வணிகர்களாகிய நாங்கள் வரவேற்கிறோம். தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார். மேலும் ஈரோட்டில் வரும் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள வணிகர் சங்க பேரவை மாநாட்டில் லட்சக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனவும் விக்ரம ராஜா தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









