நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, ரூ.75 மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், நாணயம் (Issue Of Commemorative Coin on the occasion of Inauguration of New Parliament Building) விதிகள், 2023-ன் கீழ் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.