ஹிஜாப் அணிந்த அரசு மருத்துவர் மிரட்டப்பட்ட விவகாரத்தில் மாவட்ட மருத்துவ அலுவரிடம் அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஜன்னத். இவர் கடந்த கடந்த 24-ந் தேதி இரவு நேர பணியில் இருந்த போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் புவனேஸ்வர் ராம் என்பவர் இரவு 11.30 மணியளவில் அரசு மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி ரகளையில் ஈடுபட்டதோடு தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அப்போது பெண் மருத்துவரை அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்ததால அவரை படம் பிடிக்க மருத்துவரும் பதிலுக்கு வீடியோ எடுத்துள்ளார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் மருத்துவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் திருப்பூண்டியில் போராட்டம் நடத்தியதையடுத்து கீழையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ள நிலையில் கீழையூர் காவல் துறையினர் குற்ற எண் 121 /2023 சட்ட பிரிவுகள் 294 (பி ) 353,298 மற்றும் 67 தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டபடி புவனேஸ்வர்ராம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
“ஹிஜாப் அணிந்த மருத்துவர் மிரட்டப்பட்ட விவகாரத்தில் மாவட்ட மருத்துவ அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளோம்; அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் அளித்துள்ளார்.







